மறுபாதி இதயம்
தண்ணீர்
வெள்ளை தோலுக்கு ஆசைப்படும் இவ்வுலகில் , நிறமில்லா உன்னை பலர் நேசிப்பது ஆச்சர்யமே . எடுத்தவர் கை நிறம் பாகுபாடில்லாமல் பிரதிபலிக்கும் உன்னை நேசிக்கிறேன்.

ஆற்று மணல்:
சிறு வயதில் காவேரிப் படுக்கையில் உன் மீது படுத்துதுறங்கிய நியாபகம்,
எத்துனை நாட்கள் உன் மீது ஓடி விளையாடும் மீன்களை காண பாலம் தாண்டி வந்து இருப்பேன் ,தெரியவில்லை!
நீரில் மூழ்கி, உன் மீது மையம் கொண்டிருக்கும் செந்நிற கற்களைத் தேடிச் சென்ற நாட்களை நான் மறக்க வில்லை.
மேல் படிப்பு படிக்க, ஊரில்லில்லா கல்வியை கற்க உன்னை பிரிந்து சென்ற நான் , புது வீடு கட்டி மகிழ்வுந்து பெற்று பெரு வாழ்வு வாழ்கிறேன். உன்னை பார்க்க வேண்டும். நீ இருக்கிறாயா ?.
அப்பொழுது என் வீட்டுச் சுவரில் இருந்து ஒரு மணல் துளி ஓசை எழுப்பியது , இருக்கிறேன்!!! .

மனிதம்:
நடுநிசி இரவில் முகம் தெரியா மனிதர்க்கு தன் வாகனத்தில் இடம் கொடுக்கும் மனிதர் உள்ளவரை – மனிதம் சாகாது.
மளிகைக்கடையில் சேர்த்திக்கொடுத்தச் சில்லறையைத் திருப்பிக் கொடுக்கும் மனம் உள்ளவரை – மனிதம் சாகாது.
கொல்ல வந்த இடத்தில், கைக்குழந்தையைப் பார்த்தப்பின் மனம் மாறி சென்றவன் மனதில் இருக்கும் ஒரு துளி இரக்கம் உள்ளவரை – மனிதம் சாகாது.
வேற்று சாதி தோழியுடன் பேசாதே என்று சொன்ன அம்மா, தோழியின் தந்தை இறந்தவுடன் அவளுக்கும் சேர்த்து உணவு கட்டும் தாய்மை உள்ளவரை – மனிதம் சாகாது.
கொள்ளையும் களவும் பெருகிய இந்நாட்டில்,தன் வரிப்பணத்தில் கொஞ்சமேனும் ஏழைக்கு சென்று சேரும் என்று தவறாமல் வரிகட்டும் என் நண்பன் உள்ளவரை – மனிதம் சாகாது!

தோழியின் தந்தை
பதின்பருவ தோழி அவள்,
பலமுறை அவள் வீடு எனக்குப் பரீட்சயம் .
அவள் தந்தைக்கும் தோழி அவள்,
அதில் ஒன்றும் வியப்பில்லை .
ஒவ்வொருமுறை அவள் வீட்டில் நுழையும் போதும்
அம்மனிதர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வெளிப்படும்.
ஒரு நாள் இரவில் அவளை என்னை நம்பி விட்டுச் செல்லும் பொழுதில் என் மனம் சொன்னது – நீயும் உன் மகளுக்கு இவரைப்போன்று ஒரு தோழனாக இருக்க வேண்டும் என்று .

கலங்காதே தோழி
திரவங்கள் உன் உன் மேனியை சீண்டினாலும் உன் திறமைகள் குன்றுவதில்லை
நாங்கள் உன்னுடன் – கலங்காதே தோழி
அவர்களின் உதடுகள் உன்னை கேலி செய்தாலும் நீ சோர்வடையப் போவதுமில்லை
இந்த நாடே உன்னுடன் – கலங்காதே தோழி
புற அழகு சீர்குலைத்த அவர்களால் உன் அகச்சினம் தாங்க முடியாது
பறவைகளும் மரங்களும் உன்னுடன் – கலங்காதே தோழி
உன் மொழியும் வழக்கமும் எனக்குப் பரீட்சயம் இல்லை ஆனால் உன் கண்ணீரின் மொழி
என்னைச்சுடுகிறது – கலங்காதே தோழி.
காலம் வரும் , தடைகளை தாண்டி வா, உன் குரல் கேட்க இவ்வுலகமே உள்ளது,
உன் செயல் செம்மைபெற இதுவே தருணம். உன் போல் பலர், நீயே எடுத்துக்காட்டு.
கலங்காதே தோழி, தலை தாழ்வாதே தோழி – தலைகுனிய வேண்டியது நீ அல்ல !!!.

எழுத்து ,
விஜ.
thought provoking poems in a very crisp manner.nice
Thank you madam.
# நடுநிசி இரவில் முகம் தெரியா மனிதர்க்கு தன் வாகனத்தில் இடம் கொடுக்கும் மனிதர் உள்ளவரை – மனிதம் சாகாது.
# அவள் தந்தைக்கும் தோழி அவள்
# உன்னை பார்க்க வேண்டும். நீ இருக்கிறாயா ?.
அப்பொழுது என் வீட்டுச் சுவரில் இருந்து ஒரு மணல் துளி ஓசை எழுப்பியது , இருக்கிறேன்!!!
Good lines to read…
Keep going… 👍
Thank you Sathiya.